மும்பை, தேசிய கீதத்தை அவமதித்ததாக மஹாராஷ்டிராவில் தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், ௨௦௨௨ல் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, நாற்காலியில் அமர்ந்துஇருந்ததாகவும், பாதியில் வெளியேறி, தேசிய கீதத்தை அவமதித்ததாகவும் மம்தா பானர்ஜிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மம்தா பானர்ஜிக்கு, ௨௦௨௨ மார்ச்சில், ‘சம்மன்’ அனுப்பியது. இதை எதிர்த்தும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், மம்தா பானர்ஜி சார்பில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, சம்மனை ரத்து செய்த செஷன்ஸ் நீதிமன்றம், மம்தா பானர்ஜி மீதான புகார் குறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும், மும்பை உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
குற்றவியல் நடைமுறை விதிகளின்படி, தன் எல்லைக்கு வெளியே உள்ளவர் தொடர்பான வழக்கு, விசாரணைக்கு ஏற்றதா என்பது குறித்து மாஜிஸ்திரேட் முடிவு செய்யலாம்.
இந்த நடைமுறையின்படி மீண்டும் விசாரிக்க, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. இதில் தலையிட வேண்டிய அவசியமும் இல்லை. அதனால், மம்தா பானர்ஜியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.