ஜேர்மனியில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், குடிபெயரும் மக்களுக்கான விதிகளில் புதிய சீர்திருத்த திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஊழியர்களின் பற்றாக்குறை
ஐரோப்பாவிலேயே மிகப்பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி, தற்போது திறமையான ஊழியர்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.
2022ல் மட்டும் வரலாறு காணாதவகையில் 2 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ஜேர்மனிக்கு குடிபெயரும் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியே இருந்து, ஜேர்மனியில் குடிபெயரும் மக்களுக்கு முன்னுரிமை வழங்க இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்பொருட்டு, இடம்பெயர்வு கொள்கையில் ஒரு புதிய தொடக்கத்திற்கான அடித்தளத்தை நாங்கள் அமைக்க இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் நிதியமைச்சர் Christian Lindner.
ஆண்டுக்கு 60,000 தொழிலாளர்கள்
ஜேர்மனியின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் எந்த ஒரு தறமையான தொழிலாளியையும் நாடு வரவேற்க காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு வெளியே, ஆண்டுக்கு 60,000 திறமையான தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்க ஜேர்மன் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்முறை அல்லது பல்கலைக்கழக பட்டம் மற்றும் ஒரு வேலைக்கான ஒப்பந்தம் ஆகியவற்றுடன் நாடும் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும்,
இரண்டாவதாக சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரியும் குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் மற்றும் பட்டம் அல்லது தொழில் பயிற்சி தேவை எனவும்,
மூன்றாவதாக, வேலைக்கான ஒப்பந்தம் ஏதுமின்றி, தம்மால் வேலை தேட முடியும் என்பவர்களுக்கும் வாய்ப்பளிக்க இருப்பதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
மூன்றாவது தரப்பினரில், கல்வி, மொழித்திறன், தொழில்முறை அனுபவம், வயது உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொள்வார்கள் என்றே கூறுகின்றனர்.