விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ
ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ட்ரெட் குமார் தயாரித்துள்ள 'விடுதலை' படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியராகவும் நடித்துள்ளனர். மார்ச் 31, 2023 அன்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுகிறது.
இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி நாயகி பவானி ஸ்ரீ கூறியதாவது: பணிக்காக கிராமத்திற்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிளுடன் (சூரி) அழகான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வெற்றிமாறன் சாருடன் பணிபுரிவது என்பது எந்த நடிகருக்கும் நீண்ட நாள் கனவு, நானும் இதற்கு விதிவிலக்கல்ல. என்னுடைய இரண்டாவது படத்திலேயே அது நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதையும் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். அடர்ந்த காடுகளுக்குள் படப்பிடிப்பு நடந்தபோது அங்கிருக்கும் ஒரு செடி, பூச்சி கூட தொந்தரவு செய்யாதபடி பார்த்துக் கொள்ள விரும்பினார். இது எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. உணர்ச்சிப்பூர்வமாக தன் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் அவர் சிறந்த இயக்குநர்.
படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களிலும் நான் இருக்கிறேன். இதற்கான பாராட்டுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான பாடல்களால் படத்தை அழகுபடுத்தியிருக்கும் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாருக்கு எல்லாப் புகழும் சேரும். நான் இசை குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் எனக்கு இசைமீது ஆர்வம் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.