பாகுயோ, பிலிப்பைன்சில் 608 கோடி ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட ‘மெத்தம்பேட்டமைன்’ என்ற போதைப் பொருளை, அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவற்றை விற்பனை செய்த சீன நபரையும் கைது செய்தனர்.
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில், போதைப் பொருள் புழக்கம் அதிகளவு இருப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூனில், அந்நாட்டு அதிபராக பெர்டினாண்ட் மார்கோஸ் பதவியேற்றபோது, தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதையடுத்து தலைநகர் மணிலாவில், போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து, போதைப் பொருட்களை, சுற்றுலா தலமான பாகுயோ நகரில் கடத்தல்காரர்கள் பதுக்கி வைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது, தேநீர் பைகள் அடங்கிய பெட்டியில் 500 கிலோ எடையிலான மெத்தம்பேட்டமைன் என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு 608 கோடி ரூபாய் என தெரியவந்தது. மேலும், போதைப் பொருள் விற்பனை செய்த சீன நபரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.