பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ அரசு பதவியில் உள்ளது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இதனால், ஆளும் பாஜ மட்டுமில்லாமல், காங்கிரஸ் மற்றும் மஜத உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் ஆளும் பாஜ அரசு, கடந்த சில வாரங்களாக அவசர அவசரமாக பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தது.
முழுமையாக முடிக்காமல் இருக்கும் திட்டங்களை கூட பிரதமர் மோடியை வரவழைத்து திறந்து வைத்தனர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தின் 15வது சட்டப்பேரவை கடந்த 2018 மே 25ம் தேதி தொடங்கியது. அதன் பதவி காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இதனால், கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கு வரும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். அதன்படி சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 21ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 24ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு பதிவு மே 10ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படும்’ என்றார். இந்த தேர்தலில், ஆளும் பாஜ, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
* வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கு அவசரமில்லை
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட வயநாடு தொகுதி இடைத்தேர்தல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்த பதிலில், “எந்தவொரு தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டால் அங்கு தேர்தல் நடத்த 6 மாத கால அவகாசம் உள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் அவர் மேல் முறையீடு செய்ய 30 நாள் காலஅவகாசம் கொடுத்து, தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த அவசரமில்லை. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்” என்றார்.
* 300 வேட்பாளர் பெயர்கள் புதிய வாக்கு இயந்திரம்
தலைமை தேர்தல் ஆணையர் கூறுகையில், ‘கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நாட்டில் முதல் முறையாக 300 வேட்பாளர்களின் பெயர்கள் பதிவு செய்யும் வகையில் ஐதராபாத்தில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாக்கு இயந்திரங்கள் எப்படி பயன்படுத்தப்படும் என்பது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் அறிமுகம் செய்யப்படுகிறது’ என்றார்.
உங்கள் வேட்பாளரை அறிய…
* தேர்தல் ஆணையம் சார்பில் ‘KYC‘ (உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள்) செயலி மற்றும் ‘Civgil’ செயலியை உருவாக்கியுள்ளது.
* அதில், தேர்தல் வேட்பாளர்களின் விவரங்களுடன் உறுதிமொழிப்பத்திரம் இணைக்கப்பட்டிருக்கும்.
* வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், வாக்காளர்கள் ‘சிவ்கில்’ செயலியில் புகார் அளிக்கலாம்.
* தேர்தல் முறைகேடுகளை தடுக்க 2400 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அளிக்கப்படும் புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.