காலிஸ்தான்: `டாக்டர் வீர் சிங் முதல் அம்ரித்பால் சிங் வரை' – தனி நாடு கோரிக்கை கடந்து வந்த பாதை!

சமீபகாலமாகச் செய்திகளில் அதிகம் ஆக்கிரமித்த பெயர்களில் ஒன்று ‘வாரிஸ் பஞ்சாப் டே’ தலைவர் அம்ரித்பால் சிங். இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர், இன்னும் காவல்துறையிடம் சிக்கவில்லை. இவரை இந்திய அரசு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது ’காலிஸ்தான்’ எனும் தனி நாடு கோரிக்கை. இங்கிலாந்து தலைநகர் லண்டன், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகங்கள்மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள்  தாக்குதல் நடத்தினர். சர்வதேச அளவில் பேசுபொருளான காலிஸ்தான் எனும் தனி நாடு கோரிக்கை குறித்து தெரிந்துகொள்ள, பஞ்சாப் மாகாணத்துக்கான சில நிகழ்வுகளை தெரிந்துகொள்ள வேண்டும்.

வாஷிங்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கலள்

சீக்கியர்களின் தாய்நிலம்:

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவ் பிறந்தது தற்போது பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் பகுதியான நங்கனா சாஹிப். இதுதான் சீக்கியர்களுக்கான தாய்நிலம். பஞ்சாப் சீக்கிய மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் வாழும் பகுதியாக இன்றுவரை அடையாளப்படுத்தப்படுவது. பஞ்சாப், அதைச் சுற்றியிருந்த பகுதிகள் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு, பண்டா சிங் பகதூரால் (Banda Singh Bahadur) நிறுவப்பட்ட 12 சீக்கிய  சிற்றரசுகளின்  கூட்டமைப்பால் ஆளப்பட்டது. அதன் பிறகு இந்த பகுதிகள் மகாராஜா ரஞ்சித் சிங் (1799 – 1849) கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையால் 1849-ல், சீக்கியப் பேரரசு பிரிட்டிஷ் இந்தியாவின் தனி சமஸ்தானங்கள் பஞ்சாப் மாகாணமாக மாற்றப்பட்டது.

அப்போது தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டுச் சுடர் பரப்பியது. அதன் விளைவாக இந்தியச் சுதந்திரத்துக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் போது, 1940-ம் ஆண்டு, லாகூரில் நடைபெற்ற மாநாட்டில், முஸ்லிம் லீக் கட்சி ‘முஸ்லிம்களுக்கென்று தனிநாடு வேண்டும், பாகிஸ்தானை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்’ என்று கோரிகை விடுத்தது. அதனால், பாகிஸ்தான் தனி நாடாகி விடும். அதைத் தொடர்ந்து, இந்தியா என்றோர் நாடு தனியாகப் பிரிந்து இந்துக்களும் தனியாகப் பிரிந்துவிடுவார்கள்.

சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு காலிஸ்தான் வரைபடம்

ஆனால் சீக்கியர்களுக்கென்று தனி நாடு இருக்காது, எனவே, சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாப் மாநிலத்தையும், பாகிஸ்தானில் சீக்கியர்கள் அதிகமாக வசித்த ஒரு பகுதியையும் இணைத்து சீக்கியர்களுக்கென தனி நாடு அமைக்க வேண்டும் எனச் சீக்கியர்கள் நினைத்தனர். அப்போது தான் முதன்முதலாகச் சீக்கியர்களுக்கான தனி நாடு எனும் கோரிக்கை டாக்டர் வீர் சிங் பாட்டி ( Dr Vir Singh Bhatti) ஆல் முன்வைக்கப்பட்டது. 

நேரு

நேருவின் அறிவிப்பும், பின்வாங்களும்:

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் 1946-ம் ஆண்டு கொல்கத்தா மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய ஜவஹர்லால் நேரு,`சீக்கியர்களுக்கான உரிமைகளைப் பாதிக்காத வண்ணம், சீக்கிய மக்களே தங்களின் பகுதிக்குச் சுயாட்சி அதிகாரம் கொண்டிருப்பார்கள்’ என்ற ஒப்பந்தத்தை அறிவித்தார். இந்த வாக்குறுதியினால் சீக்கியர்கள், தங்களுக்குத் தனி நாடு கிடைத்து விடும். இப்போதைக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று எண்ணி, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டனர். இந்திய நாடு சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது.

அப்போது பாகிஸ்தானிலிருந்து பெரும்பாலான சீக்கியர்கள், இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா,  ஹிமாச்சலப்  பிரதேசத்துக்குக் குடியேறினர். அப்போது நேரு ஒருங்கிணைந்த இந்தியாவின் நலன்களைக் கருத்தில் கொண்டு, முன்பு உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இது சீக்கியர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதனால், சீக்கியர்களுக்கான தனி நாடு, காலிஸ்தான் என்ற முழக்கம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது.

அகாலி தளத்தின் தலையீடு:

சீக்கிய மதத்தையும், சீக்கியர்களின் நலனையும் முன்னெடுப்பதற்கென 1920-ல் சிரோமணி குருத்துவாரா பிரபந்த செயற்குழுவால் ஆரம்பிக்கப்பட்ட அகாலி தளக் கட்சி, 1956-ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, சீக்கியர்களை ஒன்றிணைத்துத் தனி மாநிலம் வேண்டும் எனப் போராடியது. ஆரம்பக்காலங்களில் மத்திய அரசு இதை நிராகரித்தாலும், அதன்பின் நடந்த வன்முறைகளாலும், தொடர் போராட்டங்களாலும் சீக்கியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை பிரித்து சீக்கியர்களுக்காகப் பஞ்சாப் மாநிலம் மத்திய அரசால் ஒதுக்கித் தரப்பட்டது.

அகாலி தளம் கட்சி

ஆனால், `தங்களுக்கான உரிமைகள் சரியான முறையில் கொடுக்கப்படாமல் இருக்கிறது. எனவே எங்களுக்குத் தனி நாடுதான் வேண்டும்’ என்ற போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. அதன் பிறகு 1960-களுக்கு மத்தியில் சீக்கியர்களுக்கான சுயாட்சி பிரச்னையை மீண்டும் கையில் எடுத்தது அகாலி தளம். 

அதிகாரபூர்வ காலிஸ்தான் இயக்கம்: 

1970-களில் காலிஸ்தான் தனி நாடு குறித்த கோரிக்கையை இங்கிலாந்திலிருந்து வந்த சரண் சிங் பான்சி, ஜககித் சிங் சௌஹான் போன்ற சில சீக்கிய தலைவர்கள் அழுத்தமாக முன்வைத்தனர். ஜகஜித் சிங் சௌஹான் (Jagjit Singh Chohan) அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’-ல் தனி காலிஸ்தான் உருவாக்கப் போகிறேன் என 1971-ம் ஆண்டு விளம்பரம் கொடுத்தார். அதனால் வெளிநாடுகளில் வாழ்ந்த சீக்கியர்களிடமிருந்து போராட்டத்துக்கான நிதியுதவி குவியத் தொடங்கியது.

இதற்கிடையே 1978-ம் ஆண்டில் `தல் கல்சா` (Dal Khalsa) என்ற தனி அமைப்பை சில சீக்கிய இளைஞர்கள் உருவாக்கி, காலிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இதனால், 1980-ம் ஆண்டு ஜகஜித் சிங் சௌஹான், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஏற்பட்ட உடன்படிக்கையில், திருப்தி ஏற்படாததால் காலிஸ்தான் அமைப்பின் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்தது. இதனால் அனந்தப்பூர் சாகிப்பில், காலிஸ்தான் தேசிய கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவரானார் ஜகஜித் சிங் சௌஹான், அதோடு மட்டுமல்லாமல் தங்களுக்கென்று தனி ரூபாய் நோட்டுகளையும், தனி அஞ்சல் தலைகளையும் புழக்கத்துக்குக் கொண்டு வந்தார்.

ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே

காலிஸ்தான் என்ற தனி அமைப்பு உருவாகி விட்டதாகவும் அறிவித்தார். ஆனால்,1982-ம் ஆண்டு காலிஸ்தான் என்ற இயக்கம், ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே-வால் (jarnail Singh Bhindranwale) அதிகாரபூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே.”இதன் முக்கிய நோக்கம் சீக்கிய மரபுகளைக் காப்பதுடன், விடுதலைக்கான தர்மயுத்தம்” என அப்போது குறிப்பிட்டார்.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்:

பஞ்சாபில் தனி நாடு இயக்கத்திலிருந்த சீக்கியர்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. எனவே, பஞ்சாபில் வகுப்புவாத பதற்றம் அதிகரித்தது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்கதையானது.

இதன் காரணாமாக ஜர்னைல் சிங் பிந்திரன்வாலா  பிரபலமடைந்தார். காலிஸ்தானின் பெயரால் அப்பாவிகள் கொல்லப்படுவதால், இதைத் தடுப்பதற்கும் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலா, அவரின் ஆயுதமேந்திய ஆதரவாளர்களுக்கு எதிராக ஜூன் 1984-ல் ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற குறியீட்டுப் பெயரில் அதிரடித் தாக்குதலை ராணுவத்தைக் கொண்டு அரங்கேற்றினார் அப்போது பிரதமர் பதவியிலிருந்த இந்திரா காந்தி.

அமிர்தசரஸ்

சீக்கியர்களின் புனித வழிபாட்டுத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே-வும், அவரின் ஆதரவாளர்களும் பெருமளவில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, தலைமறைவாக இருந்தனர். அதுவரை இல்லாத நடைமுறையாக இந்திய ராணுவத்தினர், பொற்கோயிலுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தி பிந்தரன்வாலே மற்றும்  அவரது ஆதரவாளர்களைச் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்க நேரிட்டது. இது சீக்கியர்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

காலிஸ்தானியர்களின் கோபமும் அதன் விளைவும்:

அமிர்தசரஸ் பொற்கோயிலில், பொதுமக்கள் கூடியிருந்த நேரத்தில், ராணுவத்தினர் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தியதால், இந்திரா காந்தி மீது ஒட்டுமொத்த சீக்கியர்களும் கடுங்கோபம் அடைந்தனர். இதன் விளைவாக, இந்திரா காந்தி அவரின் மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து 1984-ல் சீக்கிய இனப்படுகொலை என்றும் அழைக்கப்படும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு, காலிஸ்தானிகளின் போராட்டம் உச்சத்திலிருந்தது. அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

இந்திரா காந்தி உடல்

அதைத் தொடர்ந்து,1992-ல் இந்தியத் தேசிய காங்கிரஸ் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. பியாந்த் சிங் பஞ்சாபின் முதல்வரானார். டி.ஜி.பி கே.பி.எஸ் தலைமையில்  காலிஸ்தானிகளின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உத்தரவிட்டார். 1995-ல் பஞ்சாபிலிருந்து கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. ஆனால், பஞ்சாப் காவல்துறை  காலிஸ்தானிகளை  கட்டுப்படுத்துகிறோம்  என்ற பெயரில் 25000 பேரைக் கொன்று குவித்ததாக  ஜஸ்வந்த் சிங் கல்ரா என்ற மனித உரிமை ஆர்வலர் ஆதரங்களுடன் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அவரும் காவல்துறை அதிகாரிகளால் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதோடு காலிஸ்தான் கோரிக்கையும் அமைதியானது.

மீண்டும் காலிஸ்தான்…:

அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் மீண்டும்  காலிஸ்தானுக்கான  கோரிக்கையை  எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் பல்கலைக்கழகம் சண்டிகரில் சட்டம் பயின்று, அமெரிக்காவில் சட்டப் பயிற்சி செய்யும் குர்பத்வந்த் சிங் பண்ணு என்பவர், 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் `நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற பெயரில் குழு ஒன்றை உருவாக்கினார். அப்போது அந்தந்த நாடுகளில் இருக்கும் சீக்கிய அமைப்புகள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர் ஆனால் பஞ்சாபில் இதற்கு அவ்வளவு ஆதரவு  கிட்டவில்லை.

குர்பத்வந்த் சிங் பண்ணு

இந்த நீதிக்கான சீக்கியர்கள் என்ற குழுவைப் பிரிவினைவாதம் ஏற்படுத்துவது காரணமாக UAPA  சட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. 2020-ம் ஆண்டு இந்திய அரசு காலிஸ்தான் குழுக்களுடன் தொடர்புடைய 9 பேரைப் பயங்கரவாதிகளாக அறிவித்தது. மேலும் காலிஸ்தானை ஆதரித்து இயங்கி வந்த 40 வலைத்தளங்களையும் முடக்கியது. ஆனாலும், குர்பத்வந்த் சிங் பண்ணு (Gurpatwant Singh Pannun) காலிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு  பிரசாரத்தை தொடங்கினார். கனடாவின் சில பகுதிகளிலும், மற்ற பிற இடங்களிலும் இது போன்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் சர்வதேச அரசியலில் அது பெரிதாக எடுபடவில்லை.

வாரிஸ் பஞ்சாப் டி -யும் அம்ரித்பால் சிங்-கும்:

2021-ல் விவசாயிகள் போராட்டத்திற்குப் பெரிதும் ஆதரவளித்த தீப் சிங் சித்து எனும் நடிகர், 2021 செப்டம்பர் மாதம் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையுடன் பஞ்சாபின் வாரிசுகள் எனும் பொருளில் வாரிஸ் பஞ்சாப் டி (Waris Punjab De) எனும் அரசியல் இயக்கத்தை நிறுவினார். ஆனால்,15 பிப்ரவரி 2022 அன்று தீப் சிங் சித்து ஹரியானா மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, துபாயில் வேலை செய்து வந்த அம்ரித்பால் சிங், இந்தியா வந்து வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அம்ரித்பால் சிங்

இவருக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகச்  சந்தேகிக்கப்படுகிறது. தன்னை தானே மத போதகர் என அழைத்துக் கொள்ளும் அம்ரித்பால் சிங், காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தன் கூட்டாளி லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க வேண்டும் எனக் கூறி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தை ஆயுதம் தாங்கிய தன் குழுவுடன் முற்றுகையிட்டு அவரை மீட்டார். அதிலிருந்து மக்களிடம் பிரபலமடைந்தார். அதைத் தொடர்ந்து, சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை முன்வைத்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இதன் காரணமாகவே அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் தான் இவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த இந்திய அரசிடமிருந்து தலைமறைவாக இருக்கிறார் அம்ரித்பால் சிங். இவரைக் கைதுசெய்யக்கூடாது என்ற கோரிக்கையுடனும், தனி நாடு கோரிக்கையுடனும் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.