கோவை: துப்பாக்கிகளுடன் பிடிபட்ட இந்து முன்னணி நிர்வாகி நண்பரை சுட்டுவிட்டு நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. அவர் மீது ஆயுத தடை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் துப்பாக்கியை வைத்து கட்ட பஞ்சாயத்து, சட்ட விரோத செயல்களின் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. கோவை புலியகுளம் மசால் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் அயோத்தி ரவி என்கிற ரவிச்சந்திரன் (45). இந்து முன்னணி கோவை மாவட்ட துணை தலைவர். இவரது வீட்டில் ராமநாதபுரம் போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு ரக கைத்துப்பாக்கி (பிஸ்டல்), 5 தோட்டாக்களும், அவரிடம் ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அயோத்தி ரவி கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 23ம் தேதி தனது மகள் பிறந்த நாளின்போது வெள்ளலூரில் நண்பர் தீபக் என்பவரிடம் துப்பாக்கியை காட்டியுள்ளார். துப்பாக்கி எப்படி சுடும்? என அவர் சுட்டுக்காட்டியபோது ஒரு குண்டு தீபக்கின் இடது கால் தொடையில் பாய்ந்தது. இதில் காயமடைந்த தீபக், ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது காட்டு பன்றி வேட்டையின்போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்துவிட்டதாக அயோத்தி ரவி டாக்டரிடம் கூறியுள்ளார். இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது. அதன் பின்னரே அயோத்தி ரவி நேற்று முன்தினம் போலீசில் சிக்கியுள்ளார். அவரிடம் இருந்த துப்பாக்கிகளில் மேலும் சில தோட்டாக்கள் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த அவர் 2018ல் செல்வபுரம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரிடம் ஒரு துப்பாக்கியும், சென்னையை சேர்ந்த பாட்டில் பாஸ்கர் என்பவரிடம் இன்னொரு துப்பாக்கியும் ரூ. 90 ஆயிரத்துக்கு வாங்கியதாக தெரிகிறது. மேலும் அவர் கடந்த சில ஆண்டாக பல்வேறு குற்ற வழக்குகளில் மிரட்டுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளதும், இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கஞ்சா மற்றும் பல்வேறு போதை பொருட்கள் கடத்தல், விற்பனையில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த விவரங்களை போலீசார் விசாரித்தபோது இவரின் பல்வேறு சட்ட விரோத செயல்பாடுகள், கட்ட பஞ்சாயத்து விவகாரங்கள் தெரியவந்தது. அவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான், துப்பாக்கி விவகாரத்தின் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
* அ வர் 2018ல் செல்வபுரம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரிடம் ஒரு துப்பாக்கியும், சென்னையை சேர்ந்த பாட்டில் பாஸ்கர் என்பவரிடம் இன்னொரு துப்பாக்கியும் ரூ. 90 ஆயிரத்துக்கு வாங்கியதாக தெரிகிறது.