புதுச்சேரி: பி.சி.எஸ்., அதிகாரிகள் எனப்படும் உள்ளூர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக, சபாநாயகர் செல்வம் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
புதுச்சேரி சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் சபாநாயகர் செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விபரம்:
புதுச்சேரி மாநிலத்தில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு, முறையான நிரந்தர பதவி உயர்வு ஆணை வழங்கப்படாமல், ‘சிடிசி’ முறையிலும், அடாக் முறையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனாலும், அவர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படுவதாலும் மனநிறைவோடு முனைப்பாக பணி செய்வதற்கு சிரமங்கள் உள்ளது. இதை, சட்டசபையில் அரசின் கவனத்துக்கு எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்தனர்.
புதுச்சேரி சிவில் சர்வீஸ் விதிகளில் 1967ம் ஆண்டு 62 பதவிகள் உருவாக்கப்பட்டன. தற்போது, அதை 94 ஆக உயர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் கொடுத்து விட்டது. இதுதொடர்பாக, மத்திய அரசு மற்றும் யூ.பி.எஸ்.சி.,-யில் தொடர்ந்து கண்காணித்து தகுந்த அறிவிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகள் தான். இது, கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
எனவே, புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் கேசவன், சிறப்பு உள்ளிருப்பு ஆணையர் நெடுஞ்செழியன் ஆகியோர், இதுசம்பந்தமாக தொடர் நடவடிக்கை எடுத்து, ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்று, முதல்வரிடம் சமர்ப்பித்து தக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு, செல்வம் பேசினார்.
முன்னதாக, கேள்வி நேரத்தில் பி.சி.எஸ்., அதிகாரிகள் தொடர்பாக சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு எழுப்பிய கேள்வி மீது விவாதம் நடந்தது. இதற்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார். அப்போது நடந்த விவாதம்:
நேரு: உள்ளூர் அதிகாரிகள் பயன் பெற முடியாத அளவுக்கு பி.சி.எஸ்., பதவிகள் உள்ளது. உள்ளூர் அதிகாரிகள் முறையான பதவி உயர்வு பெற முடியவில்லை. ‘சிடிசி’ அடிப்படையில் பதவி உயர்வு பெற்று, ஊதிய உயர்வு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். 23 அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வகிக்கின்றனர். இதனால், முழுமையாக பணியாற்ற முடிவதில்லை. ஒருவருக்கு ஒரு பணியிடம் தர வேண்டும். அப்போது தான் மக்கள் பணிகள் நன்றாக நடக்கும்.
முதல்வர்: நல்ல கருத்தை தெரிவித்துள்ளீர்கள்.
நேரு: ‘சிடிசி’ முறையில் பதவி உயர்வு தருவதைவிட, முறையான பதவி உயர்வு தர வேண்டும்.
முதல்வர்: தலைமைச் செயலர் உள்ளிட்டோர் கவனம் செலுத்தி இந்த குறையை சரி செய்ய வேண்டும். அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
நேரு: ‘சிடிசி’ அடிப்படையில் பதவி உயர்வு தரும்போது அவர் ஏற்கனவே வகித்த பதவி காலியிடமாக காட்டப்படுவதில்லை. இதனால், கீழே பல நிலைகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது.
ரமேஷ்: இதற்கு தலைமைச் செயலரும், சம்பந்தப்பட்ட துறையின் செயலரும் என்ன முடிவு எடுக்கப் போகின்றனர்?
நேரு: அமைச்சரவை உள்ள மாநிலம் புதுச்சேரி. ஆனால், பதவி உயர்வு வழங்க முடியவில்லை. அதிகாரிகளின் நம்பிக்கையை வீணடிக்க கூடாது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு மட்டும் பதவி உயர்வு தருகின்றனர். தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தர முடியவில்லை.
முதல்வர்: இதில் சங்கடங்கள் நிறைய உள்ளது. ஆனால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத்தில் உள்ள பிரச்னைகளை எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் பலமுறை பேசினர். இதை உடனடியாக தீர்க்க முடியாது. பதவி உயர்வு நடைமுறையில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், தற்போதைய நடைமுறையை மாற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.