டெல்லி: அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘பெம்ப்ரோலிசுமாப்’ உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு ஒன்றிய அரசு குறிப்பிட்ட வரியை இறக்குமதி வரியாக வசூலித்து வருகிறது. இதனிடையே அறிய வகை நோய்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒன்றிய அரசு அரசாணை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், அரிதான நோய்களுக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு முழு விலக்கை பெறுவதற்கு குறிப்பிட்ட பயனாளர்கள் அந்த மாவட்ட அல்லது ஒன்றிய அரசு சுகாதார அதிகாரிகளிடம் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை சமர்ப்பிக்கும் பட்சத்தில் முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படும் என ஒன்றிய அரசு தனது அரசாணையில் தெரிவித்திருக்கிறது.