பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மணீஷா கொய்ராலா. ரஜினி மற்றும் கமல் உள்ளிட்டோருடன் இணைந்து தமிழில் பல்வேறு படங்களில் நடித்த அவர், திடீரென வெள்ளித்திரையில் இருந்து காணாமல் போனார். பட வாய்ப்புகள் இல்லாததால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்த மணீஷா கொய்ராலா தனக்கு ஏன் பட வாய்ப்பு குறைந்தது? என்பது குறித்து முதன்முறையாக ஓபனாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த பாபா படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
மணீஷா கொய்ராலா கருத்து
எனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக நான் நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா படம் தான். அந்த படம் தோல்வியை தழுவியது. அது என்னுடைய திரை வாழ்க்கைக்கும் பாதிப்பாக அமைந்தது. அந்த படத்துக்குப் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளித்திரையில் இருந்து ஒதுங்கியிருக்கிறேன். கிட்டதட்ட பாபா படம் என்னுடைய திரை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது என்று கூட சொல்லலாம் என தெரிவித்திருக்கிறார்.
பாபா ரீ ரிலீஸ்
மேலும் பாபா படம் அப்போது தோல்வியை தழுவியிருந்தாலும், அண்மையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. படத்தை நானும் பார்த்தேன். சிறப்பாக இருந்தது. அப்போது ஏன் தோல்வியை தழுவியது என்பது தெரியவில்லை. இப்போது வெற்றி பெற்றது மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றும் மணீஷ் கொய்ராலா தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் பாபா
ரஜினிகாந்தின் சொந்த தயாரிப்பில் உருவான படம் பாபா. பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். ஆனால், 2002 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. சர்ச்சைகளுக்கு நடுவே தான் பாபா ரிலீஸ் ஆனது. அரசியல் களங்களில் இருந்தும் கிளம்பிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி இருந்தாலும், கதை மற்றும் நடிப்பு ரஜினிக்கும் பெரிய பாதகமாக அமைந்தது. ஆனால், இப்போது மீண்டும் ரீ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பாபா நல்ல வரவேற்பை பெற்றது.