புதுச்சேரி: என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்று அம்மாநில பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் பின் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று அமைச்சர் நமச்சிவாயம், காவலர்களுக்கு விடுமுறை, பெண் காவலர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை, ராணுவ வீரர்களுக்கு சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பேரவையில் பேசியஅமைச்சர் லெட்சுமி நாராயணன், புதுச்சேரி மாநிலத்தில் நிலவக்கூடிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்எல்சி-யில் இருந்து புதுச்சேரிக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து 5 – 10 எம்எல்டி தண்ணீர் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்தபின் நெய்வேலியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதனால் புதுச்சேரிக்கு குடிநீர் பற்றாக்குறை தீரும் என்று கூறினார்.
அதுமட்டுமின்றி புதுச்சேரி நகரில் உப்பு நீர் பாதித்த சிகப்பு மண்டலத்தில் தினம் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் லெட்சுமி நாராயணன் தெரிவித்தார். அதேபோன்று கடல்நீரை குடிநீராக ஆக்கும் திட்டமும் புதுச்சேரி அரசு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக 0.5 எம்.எல்.டி. அளவிற்கான குடிநீரை தற்போது சோதனை முறையில் டெண்டர் விடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த சோதனை வெற்றிகரமாக்கப்படும் பட்சத்தில் கடல் நீரை குடிநீராக்குவதற்கும், மேலும் என்.எல்.சி.யில் இருந்து குடிநீரை கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.