Ponniyin Selvan Audio Launch Simbu Speech: பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (மார்ச் 29) நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படத்தின் நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் பங்கேற்றனர். மேலும், விழா மேடையில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மேலும், படத்தின் பாடல்களை இசை கலைஞர்கள் இசைக்க, பாடகர்கள் நேரடியாக பாடினர். இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களும் நேற்று வெளியிடப்பட்டது.
அரங்கமே அதிர்ந்த என்ட்ரி
குறிப்பாக, இன்று பத்து தல பட வெளியீடு, நேற்றிரவு சிம்பு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டில் பங்கேற்றது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அவர் விழா அரங்கத்திற்கு வந்தபோது, அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கூச்சல் எழுப்பி அவரை வரவேற்றனர். மேலும், விழாவில் அவர் மேடையில் பேசினார்.
Totally Unexpected @SilambarasanTR_ love you simbupic.twitter.com/4MbIe74SXs
— Maryam (@aintyourtype07) March 29, 2023
அவர் மேடையேறி பேசத்தொடங்கும்போது, சுமார் ஒரு நிமிடத்திற்கும் மேல் பார்வையாளர்களின் கூச்சலால் அரங்கமே ஸ்தம்பித்தது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் சிம்பு தனது பேச்சை தொடங்கினார். அப்போது பேசிய அவர்,”நானே ஏற்கெனவே டென்ஷன்-ல (பட வெளியீடு) இருக்கேன். நீங்க (ரசிகர்கள்) வேற டென்ஷன் அதிகப்படுத்துறீங்க!” என நகைச்சுவையாக கூறினார்.
மணிரத்னம் ஒரு குழந்தை
தொடர்ந்து பேசிய அவர்,”மணிரத்னத்தை நான் குழந்தையாகதான் பார்க்கிறேன். ஏனென்றால், ஒரு குழந்தைதான் தனக்கு வேண்டியதை அடம்பிடித்து வாங்கும். அதேபோல, மணிரத்னமும் தனக்கு நடிகர்களிடம் இருந்து வேண்டியதை அடம்பிடித்து வாங்கிவிடுவார். இதை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
திரைத்துறையில் எனக்கு வாய்ப்பு கொடுக்க பலரும் தயங்கியபோது, மணிரத்னம் அவர்கள்தான் என்னை அழைத்து படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் இரவில்தான் அதிகம் முழித்திருப்பேன், காலையில் தூங்குவேன். ஆனால், தற்போது ஒழுங்காக காலையில் 6 மணிக்கு எழுந்து படப்பிடிப்பிற்கு செல்கிறேன் என்றால் அதற்கு காரணம் மணிரத்னம்தான்” என்றார்.
ஐஸ்வர்யா ராய் ஓவியம்
தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் குறித்து சிம்பு பேசி வந்தார். அப்போது, நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்தும் சிம்பு பேசினார். அதில்,”ஐஸ்வர்யா ராய் மேடம் என் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு பகிர வேண்டும் என நினைக்கிறேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, நான் அப்போது நன்றாக ஓவியம் வரைவேன். அப்போது ஒரு ஓவியப்போட்டியில், மனித முகத்தை ஓவியமாக வரைய சொல்லியிருந்தார்கள்.
நான் உங்களைதான் வரைந்தேன், முதல் பரிசும் பெற்றேன். நான் அழகாக வரைந்ததால்தான் பரிசு பெற்றேன் என நினைத்திருந்தேன். நீண்டநாள் கழித்துதான் தெரிந்தது, அது உங்களின் அழகுக்காக கிடைத்த பரிசு என்று” என கூறியவுடன் மொத்த அரங்குமே அதனை ரசித்தது எனலாம்.