டிக்கெட் எடுத்தும் அனுமதி மறுப்பு.. பாவமாக நின்ற நாடோடி குடும்பம்.. விமர்சனத்தில் சிக்கிய ரோகிணி தியேட்டர்..

சிம்பு நடித்து இன்று வெளிவந்துள்ள ‘பத்து தல’திரைப்படத்தை காண சிம்புவின் ரசிகர்களும், சினிமா பிரியர்களும் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ரோகினி தியேட்டரில் இன்று காலை பத்து தல திரைப்படம் திரையிடப்பட்டது. அதை காண நாடோடி பழங்குடியினர் குடும்பம் ஒன்று டிக்கெட் எடுத்து வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

ஆனால், டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்கள் அந்த குடும்பத்தினரை உள்ளே அனுமதிக்கவில்லை என தெரிகிறது. அதை கண்ட இளைஞர்கள் சிலர் ஊழியர்களிடம் கேள்வி கேட்டனர். அதற்கு எந்த விளக்கமும் தெரிவிக்காமல் அந்த குடும்பத்தை வெளியில் அனுப்பவதிலேயே தியேட்டர் ஊழியர்கள் முனைப்பு காட்டியுள்ளனர்.

இந்நிலையில், அந்த நிகழ்வினை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, ” உரிய டிக்கெட் இருந்தும்கூட இவர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பி ட்விட்டரில் ரோகினி தியேட்டர் நிர்வாகத்தை டேக் செய்ய ஆரம்பித்தனர். இது கவனம் பெற்றதும் ரோகினி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், இன்று காலை எங்கள் தியேட்டரில் ”பத்து தல” படத்தை காண உரிய டிக்கெட்டுடன் சிலர் வந்துள்ளனர். அவர்களை எங்களது ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதற்கான காரணம்; பத்து தல திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. A சான்றிதழ் உள்ள படத்தை 12 வயத்துக்குட்பட்டவர்கள் திரையரங்கில் பார்க்க அனுமதி கிடையாது. வீடியோவில் இருந்த பெண்மணி 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது, டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்கள் இந்த அடிப்படையில்தான் சிறுவர்களை உள்ளே விட மறுத்துள்ளனர்.

இதை புரிந்துகொள்ளாமல் அங்கிருந்தவர்கள் சிலர் வேறு கண்ணோட்டத்துடன் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், தியேட்டருக்குள் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அந்த குடும்பத்தில் இருந்த மொத்த பேரையும் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர் என ரோகினி தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த குடும்பம் தியேட்டரில் அமர்ந்து படம் பாக்கும் வீடியோவையும் ஆதாரமாக எடுத்து பதிவிட்டுள்ளது ரோகினி நிர்வாகம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.