புதுடில்லி, ”ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள், பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடக்க வேண்டும்,” என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
நடப்பு ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது.
இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம், புதுடில்லியில் நேற்று நடந்தது.
சீனா மற்றும் பாக்., நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றனர்.
இதில், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் பரஸ்பரம் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடக்க வேண்டும்.
எல்லைகளில் ஊடுருவல், வெளிநாட்டு உறவுகளில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் படைகளை ஏவுவது, ராணுவ அதிகாரத்தை ஒருதலைபட்சமாக பயன் படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது, நம் அண்டை நாடான சீனாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக கருதப்படுகிறது.