காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே கண்ணப்பன் தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் வீட்டில் இருந்து 150 சவரன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி, ஐந்தரை லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் ஓரிக்கை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் அவர் தனது கூட்டாளிகளான சென்னையை சேர்ந்த ராஜன், சிவவிநாயகம் ஆகியோருடன் இணைந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 62 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் அவர்கள் வீசி சென்ற 2 கிலோ கவரிங் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரை குழப்ப போலி நகைகளை கிணற்றில் வீசினார்களா? அல்லது போலி என்பது தெரியாமல் கொள்ளையடித்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.