வந்தியத்தேவனாக கமலை நடிக்க வைக்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!
பொன்னியின் செல்வன் பாகம் 2 வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா பேசியபோது, பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சித்தவர்களில் நானும் ஒருவர். நான் 9-ஆம் வகுப்பு படிக்கும் போதே பொன்னியின் செல்வன் கதையை படித்துவிட்டேன். இந்த படத்தை எம்.ஜி.ஆர் படமாக எடுக்க விரும்பினார். என்னை இயக்குனராகவும், கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரை நடிக்க வைக்கவும் சொன்னார். குறிப்பாக கமலை வந்தியதேவன் கதாபாத்திரத்திலும், குந்தவை கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்க வைக்க கூறினார்.
அப்போது அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அது நடக்காமல் போனது. நல்ல வேலையாக நான் அந்த படத்தை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் சொதப்பியிருப்பேன் என்பதால் தான் கடவுள் இந்த படத்தை மணிரத்னத்தை எடுக்க வைத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்தும் கதாபாத்திரங்களும் அழகாக உள்ளது. இதை பார்ப்பதற்கு கல்கி உயிரோடு இல்லை என கூறினார்.