புதுச்சேரி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோருக்கு புதுச்சேரி அரசு சார்பில் விழா நடத்தப்படும். அரசு ஊதியம் பெற்று கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டோருக்கு மீண்டும் வேலை தரப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: ஒன்றிய அரசு உதவியோடும் உறுதுணையோடும் அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுச்சேரியை முன்னேற்றுவோம்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிறைவான பதில்களை அளித்துள்ளனர். புதுச்சேரியை பொறுத்தவரை நிர்வாக சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அதைக் கொண்டு வந்தால்தான் விரைவாக அரசு எண்ணங்களை செயல் வடிவில் கொண்டு வரமுடியும். பிரச்சினைகளை தீர்க்க நிர்வாகச் சீர்த்திருத்தத்தில் அரசு கவனம் செலுத்தும். புதிய சட்டப்பேரவை கட்டவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்கு விரைவில் முடிவு எடுக்கப்படும். புதிய சட்டப் பேரவைக்கு வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் புதிய சட்டப்பேரவை கட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.