அமித் ஷா சொன்னார் முன்னே… இபிஎஸ் உறுதிசெய்தார் பின்னே… அப்போ அண்ணாமலை?

Edappadi Palanisamy About Alliance With BJP: சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அதிமுக ஆட்சி காலத்தில் 110 விதியின் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பட்டியல் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

68 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 29 சதவீத அறிவிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த பணிகளும் நடைபெறவில்லை என நிதியமைச்சர் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுகிறார். 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதன்முதலில் தொடங்கியது அதிமுக ஆட்சி காலத்தில்தான். அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலமாக சென்னை மாநகராட்சி பள்ளியில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை முதன்முதலாக தொடங்கியது அதிமுகதான். 

கொடிக்கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை

சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது, கஞ்சா விற்பனை அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது, ஆனால் அதனை மறைத்து பேசுகிறார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு தடையாக இருந்ததாலேயே பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லையோ, கஞ்சா தாராளமான புழக்கத்தில் உள்ளது. இது மக்களிடையே பதட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா உணவகங்களில் மக்களுக்கு உணவு ருசியாக வழங்கப்பட்டது. தற்போது அம்மா உணவகத்திற்கு வழங்கப்படும் பொருட்களை குறைத்ததால் தரம் இல்லாத உணவு வழங்கப்படுகிறது. இதில் என்ன ஆதாரம் ஆட்சியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரியவில்லை.

அதிமுக – பாஜக கூட்டணி

ஆட்சியாளர்கள் அம்மா உணவகங்களை ஆய்வு செய்து தவறு இருக்கும் இடங்களை சீர் செய்யுங்கள் என்று அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.  ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் அச்சிட வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது.

அதிமுக – பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில் தான் போட்டியிட்டோம். நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் சந்திப்போம்” என்றார். முன்னதாக, தமிழக பாஜக, அதிமுகவுடன் கூட்டணியில் சுமுகமாக இல்லை என பேச்சுகள் எழுந்தது. 

அதிமுக கூட்டணியில் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லை என கூறப்பட்டது. மேலும், தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி விட்ட நிலையில், பாஜக கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கும். 

அந்த வகையில், நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறது என உறுதிப்பட கூறியிருந்தார். அமித் ஷாவின் பேச்சை அடுத்து தற்போது எடப்பாடி பழனிசாமியும் பாஜக கூட்டணி குறித்து தெரிவித்துள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.