சென்னை: Ponniyin Selvan 2 Audio Launch (பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு விழா): பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்காதீர்கள் என கூறியதாக அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாகியுள்ளது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரமே பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது.
வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் 1
ஐந்து பாகங்களை கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இரண்டு பாகங்களாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இதன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று உலகளவில் 500 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அறிவித்தது.
பொன்னியின் செல்வன் 2 ஏப்ரலில் ரிலீஸ்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெற்ற வரவேற்பை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமானது ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. முதல் பாகம் போலவே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இரண்டாம் பாகம் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது.
ஆடியோ வெளியீட்டு விழா
இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன், நடிகர்கள் கமல் ஹாசன், சிம்பு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கமல் ஹாசன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். ட்ரெய்லருக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்திருக்கின்றனர்.
விழாவில் துரைமுருகன் பேச்சு
ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நான் கல்லூரி படித்தபோது பொன்னியின் செல்வன் நாவலை பலமுறை வாசித்திருக்கிறேன். இந்த நாவலை படமாக்குவதாக சுபாஸ்கரன் என்னிடம் கூறியபோது மணிரத்னம் இயக்குநர் என்றார். அதற்கு நான் மணிரத்னம் இந்தப் படத்துக்கு ஒத்துவரமாட்டார். அவர் இருட்டில் படம் எடுப்பவர் என்றேன்.
படம் பார்த்து அசந்துபோனேன்
ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு அசந்துபோய்விட்டேன். படம் பார்த்ததும் வீட்டில் இருந்தபடியே சல்யூட் அடித்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். எனது தொகுதிக்குள்பட்ட திருவலம் என்ற ஊர்தான் வந்தியத்தேவனின் சொந்த ஊர். அதனால் அதில் எனக்கு மகிழ்ச்சி.
எல்லா பெருமையும் சுபாஸ்கரனுக்குத்தான்
கமல் ஹாசனுக்கு இணையானவர் திரையுலகில் இன்று எவரும் இல்லை. அவருக்கு கலைஞானி என்று கருணாநிதி பெயரிட்டார். பொன்னியின் செல்வனை படமாக எடுக்க வேண்டாம் என்ற எனது பேச்சை கேட்காமல் படம் எடுத்து வெற்றி கண்ட சுபாஸ்கரனுக்கு வாழ்த்துகள். ஒரு படத்தின் மூலம் தமிழ் மன்னனை அறிமுகப்படுத்திய பெருமை சுபாஸ்கரனைத்தான் சேரும். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இரண்டு மடங்கு வசூலை அள்ளும். ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி” என்றார்.