புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,016 பேர் புதிதாக கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய தொற்று எண்ணிக்கையை விட 40 சதவீதம் அதிகமாகும். தினசரி நேர்மறை விகிதம் 2.7 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 1.71 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. வியாழனன்று வெளியான தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் காணப்படாத மிக அதிகமான எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்தியாவில் 3,375 என்ற தொற்று எண்ணிக்கை பதிவானது குறிப்பிடத்க்கது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 19 இறப்புகளுடன் நாட்டின் மொத்த கோவிட் 19 இறப்பு எண்ணிக்கை 5,30,862 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் மூன்று பேர், டெல்லியில் இருந்து இரண்டு பேர், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவர் மற்றும் கேரளாவில் எட்டு பேர் இறந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மொத்த தொற்று எண்ணிக்கையில் 0.03 சதவீதத்தை உள்ளடக்கியது. அதே நேரத்தில் தேசிய கோவிட் 19 மீட்பு விகிதம் 98.78 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,68,321 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாரம் கோவிட் தொற்று எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான அதிகரிப்பு குறித்து பல மாநிலங்கள் அவசர கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன. ஜனவரி 16 ஆம் தேதி நோய்த்தொற்று எண்ணிக்கை 0 ஆகக் குறைந்த டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில் 300 பேர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. எனினும் மக்கள் பீதியடைய வேண்டாம் என டெல்லி அரசு இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலைமையை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக் கொண்டது.
மும்பை, புனே, தானே மற்றும் சாங்லி போன்ற மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களிலும் கோவிட் தொற்று எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கம் எவ்வளவு முயற்சி செய்தாலும், பலர் கோவிட் தடுப்பூசி பூஸ்டர் டோசை செலுத்திக்கொள்ளவில்லை என்று கூறுகிறது. மாநிலத்தில் இதுவரை 1 கோடி பேர் கூட பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளவில்லை என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் புதிதாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, தமிழக சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. புதன்கிழமை 112 பேர் புதிதாக இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 689 ஆக உள்ளது.