சென்னை: தமிழகத்தில் உள்ள சென்னை தவிர்த்த 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகளில் 8.62 லட்சம் தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது 20 மாநகராட்சிகள் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) மற்றும் 138 நகராட்சிகளில் 8.62 லட்சம் தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 30 மீட்டர் இடைவெளிக்கு ஒரு தெருவிளக்கு என்ற வரையறையின் அடிப்படையில் தேவையான இடங்களில் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
குறைந்த செலவில் மிகுந்த திறனுடன் இயங்கும் வகையிலான தெரு விளக்குகளை அமைப்பதே அரசின் நோக்கமாகும். இதனடிப்படையில், அனைத்து தெரு விளக்குகளும் மின்னாற்றல் சேமிப்பு விளக்குகளாக மாற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 16 மாநகராட்சிகள் மற்றும் 119 நகராட்சிகளில் ரூ.374.09 கோடி மதிப்பீட்டில் 3,31,895 தெரு விளக்குகளை மின்சேமிப்பு ஆற்றல்மிகு தெருவிளக்குகளாக மாற்றவும், ரூ.118.35 கோடி மதிப்பீட்டில் 77,667 புதிய தெரு விளக்குகள் அமைக்கவும் மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்மாட்டு நிதி (SUIDF), 15வது நிதிக்குழு (15th CFC) 2021-22 மற்றும் 15th CFC 2022-23 ஆகிய திட்டங்களின் கீழ் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 6 மாநகராட்சிகளில் ரூ.64.81 கோடி மதிப்பீட்டில் 33,660 புதிய மின்சேமிப்பு ஆற்றல்மிகு தெருவிளக்குகள் அமைக்கவும், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 10 நகராட்சிகளில் ரூ.20.41 கோடி மதிப்பீட்டில் 17,704 தெருவிளக்குகளை மின்சேமிப்பு ஆற்றல்மிகு விளக்குகளாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி நிலையில் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.