தஞ்சாவூர் அருகேயுள்ள செங்கிப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் வி.ஏ.ஓ அலுவலகத்தில், முன்னாள் விமானப்படை வீரரான கரிகாலன் என்பவர் வி.ஏ.ஓ-வாகப் பணியாற்றி வந்தார். இவர் அலுவலகத்தின் சுவற்றில், `கைலி, நைட்டி, அரைக்கால் சட்டை அணிந்துவருபவர்கள் அலுவலகத்துக்குள் நுழைவதற்கு அனுமதி கிடையாது’ என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகையை வைத்திருக்கிறார்.
விவசாயமே பிரதானமாக கொண்ட ஊரில் பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்துவருகின்றனர். விவசாய வேலைக்குச் செல்பவர்கள் பேன்ட், சர்ட், கோட், ஷூட் அணிந்து செல்ல மாட்டார்கள். கைலி, கால் சட்டை போன்ற உடைகள்தான் அணிந்து செல்வார்கள். இந்த நிலையில், வயல் வேலைக்குச் சென்று திரும்பும்போது, வி.ஏ.ஓ அலுவலகத்துக்குச் சென்று சான்றிதழ் தொடர்பான வேலைகளை முடிக்க முடியாமல் விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டனர்.
சிலர், `வி.ஏ.ஓ கைலி அணிந்து வரக்கூடாது என எப்படி கட்டுப்பாடு விதிக்கலாம்’ என கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையானது. அத்துடன் விவசாயி ஒருவர் கைலி அணிந்து கொண்டு தன்னுடைய மகனுக்கு சாதிச்சான்றிதழ் வாங்குவதற்காக வி.ஏ.ஓ அலுவலகத்துக்குச் சென்றபோது அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தஞ்சாவூர் ஆர்.டி.ஓ (பொ) பழனிவேல், “வி.ஏ.ஓ கரிகாலன்மீது, அடுத்தடுத்து புகார்கள் எழுந்ததால் உரிய விசாரணைக்குப் பிறகு அவரை வேறு வருவாய் கோட்டத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவுசெய்திருக்கிறோம். அதுவரை அவருக்கு தற்காலிகமாக பணி விடுப்பு ஆணை வழங்கி உத்தரவிட்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இது குறித்து வி.ஏ.ஓ கரிகாலனிடம் பேசினோம். “விமானப் படையில் பணியாற்றிய நான் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வி.ஏ.ஓ பணிக்குச் சேர்ந்தேன். விமானப் படையில் உடை உள்ளிட்ட டிசிப்லின் சார்ந்த விஷயங்கள் கடைபிடிக்கப்படும். அவற்றைப் பின்பற்றி வந்ததால், எல்லோரும் அது போல் இருக்க வேண்டும் என நினைப்பேன்.
விவசாயிகள் பலரும் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து டீசன்ட்டாக வருவார்கள். வேறு சிலர் கைலி, அரைக்கால் சட்டை அணிந்து மதுக்குடித்துவிட்டு வருவதுடன் கைலியை தூக்கி கட்டிக்கொண்டு அநாகரிகமாக நடந்து கொள்வார்கள். அந்த சிலரை சரி செய்ய வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுப்பாடுகளை விதித்தேன். உடை விஷயத்தைப் போலவே அலுவலகத்தையும் தூய்மையாகப் பராமரித்து வந்தேன். பெரும்பாலானவர்கள் இதை வரவேற்ற நிலையில், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிலர் இதைத் தவறாகச் சித்திரித்துப் பரப்பிவிட்டனர்” என்று தெரிவித்தார்.