பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் வருகிற மே 10-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மே 13-ந்தேதி நடத்தி முடிக்கப்படும்.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., ஆட்சியை மீண்டும் தக்க வைக்க வியூகம் வகுத்து வருகிறது. காங்கிரஸ், மதசார்பற்ற தளம் ஆகிய கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளன. இந்த சூழலில், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் பங்கேற்க முடிவு செய்து உள்ளது.
தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. இதன்படி, புதிய திட்டங்களை அரசு அறிவிப்பதோ, அரசு செலவில் வெளியிடவோ தடை விதிக்கப்படுகிறது.
24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்படும். அரசியல் கட்சிகள் பேரணி, பிரச்சார கூட்டங்களை முன்அனுமதி பெற்று நடத்த வேண்டும். அதற்கு, காவல் துறையிடம் இருந்தும் தடையில்லா சான்று பெற வேண்டும்.
நகரங்களில் சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி கிடையாது என்பதனால், சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். எனினும், ஊரக பகுதிகளில் கட்டிட உரிமையாளரின் ஒப்புதலுடன் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், கட்சி அறிவிப்பு பலகைகள், சுவரொட்டிகள் ஆகியவையும் அகற்றப்படும். தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையும் கர்நாடகாவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் பெண்களுக்கு சேலை மற்றும் பிற பரிசு பொருட்களை காங்கிரஸ் கட்சி விநியோகித்து உள்ளது என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதன்படி, எம்.எல்.ஏ. ஷாமனூர் சிவசங்கரப்பா மற்றும் அவரது மகனான முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷாமனூர் மல்லிகார்ஜூனன் ஆகியோர் அந்த பகுதி மக்களிடையே அவற்றை வழங்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய் கிழமை இரவு 8.45 மணியளவில், தாவணகெரே மாவட்டத்தில் கே.டி.ஜே. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அவர்கள் வாக்காளர்களுக்கு பரிசுகளை விநியோகிக்க முயன்று உள்ளனர் என கூறி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி தாவணகெரே தட்சிண சட்டசபை தொகுதியை சேர்ந்த உள்ளூர் பெண்கள் ஆத்திரத்தில் கூறும்போது, முறையான சாக்கடை வசதி இல்லை. சாலை வசதி இல்லை. விலங்குகள் வாழ்வது போன்று வாழ்ந்து வருகிறோம்.
அவர்கள் கவனம் செலுத்தவேயில்லை. ஆனால் தற்போது அவர்கள் வந்து சேலைகளையும், பரிசுகளையும் வழங்குகிறார்கள் என கொட்டி தீர்த்தனர். இதனை தொடர்ந்து அந்த கிராமவாசிகள் பலர் ஒன்று கூடி, பரிசாக கிடைத்த சேலை உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.