புதுடில்லி : புதுடில்லியில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான, சப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரியும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட, ஐந்து பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:சப்தர்ஜங் மருத்துவமனையில், நரம்பியல் பிரிவு அறுவை சிகிச்சை துறையின், இணை பேராசிரியராக பணிபுரிபவர் டாக்டர் மணீஷ் ராவத் இவர், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, மருத்துவ ஆலோசனைகள் வழங்க, சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுள்ளார். மேலும், நோயாளிகளிடம் அறுவை சிகிச்சை செய்ய, முறைகேடாக பணம் பெற்றுள்ளார்.
இவருக்கு, துணையாக மருத்துவமனையில் பணிபுரிந்த, அவ்னேஷ் பட்டேல், மணீஷ் ஷர்மா மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் தீபக் கட்டார் மற்றும் குல்தீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில், கடையின் உரிமையாளர்களான தீபக் கட்டார் மற்றும் குல்தீப் ஆகியோருடன் இணைந்து, நரம்பியல் மருத்துவமனை நிபுணர் டாக்டர் மணீஷ் ராவத், நோயாளிகளிடம் அறுவை சிகிச்சைக்கு, பணம் பெற்றுள்ளதுடன், தீபக் கட்டாருக்கு சொந்தமான, கனிஷ்கா அறுவை சிகிச்சை உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்து, கருவிகளை வாங்க, நோயாளிகளிடம முறைகேடாக பணம் வசூலித்துள்ளார்
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து, முறைகேடாக பெறப்பட்ட 2 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, முறைகேடாக பெற்ற பணத்தை, டாக்டர் மணீஷ் ராவத், தனியாருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில், முதலீடு செய்துள்ளார்.
இது தொடர்பாக, டில்லி மற்றும் உத்தரபிரதேசத்தின், பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.