திரிபுரா பட்ஜெட் கூட்டத்தொடர்
திரிபுரா மாநில சட்டசபை கூட்டத்தொடரின் போது பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது மொபைல் போனில் ஆபாச படத்தை பார்த்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ., ஜாதவ் லால் நாத், திரிபுரா மாநிலத்தில் உள்ள பாக்பாசா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஆபாசபடம் பார்த்த பாஜக எம்எல்ஏ
மாநில பட்ஜெட் தொடர்பான விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சபாநாயகரும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் பேசிக் கொண்டிருக்கும் போது, எம்எல்ஏ ஜாதவ் லால் நாத்தின் பின்னால் அமர்ந்திருந்த யாரோ ஒருவர் படம்பிடித்த வீடியோவில், அவர் ஆபாச வீடியோ கிளிப்களின் ஊடாக ஸ்க்ரோலிங் செய்வதையும், இடைநிறுத்தி ஆபாசமாகத் தோன்றும் கிளிப்பை, சபாநாயகரும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரது கைபேசியில் கவனமாகப் பார்ப்பதையும் காட்டுகிறது.
அதைத் தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.விடம் விளக்கம் கேட்டு, அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஜாதவ் லால் நாத் குற்றச்சாட்டுகள் அல்லது வீடியோவுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. கூட்டத்தொடர் முடிந்தவுடன் அவர் சட்டசபை வளாகத்தை விட்டு வெளியேறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
2012 கர்நாடகா சம்பவம்
சட்டப்பேரவையில் ஆபாசபடம் பார்த்த பாஜக எம்எல்ஏ ஒருவர் சிக்கியது இது முதல்முறை அல்ல. கர்நாடகாவில் கடந்த 2012ம் ஆண்டு அமைச்சர்கள் லஷ்மண் சவதி மற்றும் சி.சி. பாடீல் ஆகிய இருவரும், கர்நாடக சட்டப்பேரவைக்குள் அமர்ந்தபடி, ஆபாச வீடியோப் படம் பார்த்துக் கொண்டிருந்ததை, தனியார் தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்து வெளியிட்டது.
இந்தச் சர்ச்சை வெளியானதை அடுத்து, பாஜக தலைவர் நிதின் கட்கரி, கர்நாடக முதலமைச்சர் சதானந்த கெளடா, மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, அந்த மூன்று அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.
அதேபோல் அவர்களுக்கு அந்த ஆபாசப் படத்தை அனுப்பிய இன்னொரு அமைச்சர் கிருஷ்ணா பாலேமாரும் பதவியை ராஜினாமா செய்தார். இது, சதானந்த கெளடா தலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசுக்கும், தேசிய பாஜக தலைமைக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
அமைச்சர்கள் ராஜினாமா
தனது ராஜினாமா குறித்து, அமைச்சர் சி.சி. பாடீல் கூறும்போது, “சட்டப்பேரவைக்குள் என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கிறோம். அந்த விசாரணைக்குப் பிறகு, எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பது தெரியவரும்’’, என்றார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: காங்கிரஸ் அதிரடி வியூகம்… சிக்கலில் பாஜக!
அதேபோல் கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் தர்மசங்கடம் ஏற்படக்கூடாது என்பதால்தான், தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாகவும், கட்சித் தலைமை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் லஷ்மண் சவதி தெரிவித்தார். ஆனால் அமைச்சர்கள், லக்ஷ்மண் சவாதி மற்றும் சிசி பாட்டீல் ஆகியோர் விசாரணையில் எந்த தவறும் செய்யவில்லை என்று பின்னர் கட்சியால் மீண்டும் சேர்க்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடதக்கது.