ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-21, 2022 நிகழ்வு சென்னை டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. திரையுலகைச் சார்ந்த பல நட்சத்திரங்களும் பங்கேற்ற இந்த விழாவில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ படம் பற்றிய எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்டுகள் பலவும் வெளியிடப்பட்டன. அவை இங்கே…
தயாரிப்பாளர் தாணு விகடன் மேடையை அலங்கரிக்க, ரசிகர்கள் ‘வாடிவாசல்…வாடிவாசல்…’ என ஆரவாரம் செய்யத் தொடங்கினர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தாணுவும் ‘வாடிவாசல்’ அப்டேட்டுடன் பேச்சைத் தொடங்கினார்.
”உலகத் தமிழர்களுக்கு ஒரு விடியல், ‘வாடிவாசல்.’ இந்த வருடத்திலேயே ரசிகர்களின் எண்ணம் நிறைவேறும். உலகத் தமிழர்கள் அனைவரும் உச்சி முகரும் படைப்பாக ‘வாடிவாசல்’ அமையும்’’ என தாணு பேசினார்.
த.செ.ஞானவேலுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதை வழங்க மேடையேறிய இயக்குநர் வெற்றிமாறனிடமும் ரசிகர்கள் ‘வாடிவாசல்’ அப்டேட் கேட்கவே… ‘நான் `விடுதலை’யை முழுமையாக முடிக்க வேண்டும். சூர்யா சார் இப்போது நடிக்கும் படத்தை முடிக்க வேண்டும். இரண்டும் முடிந்துவிட்டால், `வாடிவாசல்’தான்.
`வாடிவாசல்’ படத்தின் ஜல்லிக்கட்டுக் காட்சிகளுக்காகப் பயிற்சி செய்ய, சூர்யா சார் இரண்டு கன்றுகளை வாங்கினார். அவை இரண்டும் இப்போது சூர்யா சார் வீட்டில் காளைகளாக வளர்ந்து நிற்கின்றன’ என்று வெற்றிமாறனும் வாடிவாசல் அப்டேட்டுடனேயே பேச்சைத் தொடங்கினார். `வாடிவாசல்’ எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியிருக்கிறது!