திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு விதிமுறைகளை மீறி நிதி உதவி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முதல்வர் பினராய் விஜயன் மற்றும் 18 அமைச்சர்கள் மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டது. விசாரணை முடிந்து ஒரு வருடம் ஆன பிறகும் இந்த வழக்கில் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிரான இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறி கேரள பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினரான சசிகுமார் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பினராய் விஜயனுக்கு எதிரான வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி லோக் ஆயுக்தாவில் மனு கொடுக்க சசிகுமாரை அறிவுறுத்தியது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்தது. இந்நிலையில் பினராய் விஜயனுக்கு எதிரான வழக்கில் லோக் ஆயுக்தாவில் இன்று தீர்ப்பு கூறப்பட உள்ளது. பினராய் விஜயனுக்கு எதிராக தீர்ப்பு அமையுமா என்ற பரபரப்பு கேரள அரசியலில் ஏற்பட்டுள்ளது.