திசைகளெங்கும் இருக்கும் திறமைக்காரர்களைக் கொண்டாடவும், பரவசப்படுத்தவும் வைப்பவை ‘விகடன் விருதுகள்.’ மரியாதைக்குரிய, மகத்தான மனிதர்களை அங்கீகரித்தும், மதிக்கப்படவேண்டிய சாதனையாளர்களைச் சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதாலும்தான் விகடன் விருதுகளை நாங்கள் ‘திறமைக்கு மரியாதை’ என்ற அழகிய அடைமொழியுடன் அழைக்கிறோம். 2020-21, 2022-ம் ஆண்டுகளுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா சென்னை வர்த்தக மையத்தில் தற்போது நடைபெற்றுவருகிறது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் ஒரே மேடையில் சங்கமித்திருக்கும் பிரமாண்ட நிகழ்வாக ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடந்துகொண்டிருக்கிறது.
உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஆளுமைகள் ஒரே மேடையில் தோன்ற… அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது. திரைப் பிரபலங்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடியதில், தற்போது ட்விட்டரில் இந்திய அளவில் 5-வது இடத்தில் டிரெண்ட்டாகிவருகிறது ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா!