மாஸ்கோ, ரஷ்யாவில் உளவு பார்த்த அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையின் நிருபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் அலுவலகம், ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் செயல்பட்டு வருகிறது.
இங்கு, அமெரிக்காவைச் சேர்ந்த எவன் கெர்ஷ்கோவிச் என்பவர் நிருபராக பணியாற்றி வருகிறார்.
ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் பணியாற்றி வந்த இவர், யூரல் பிரதேசத்தில் உள்ள ஏகாதெரின்பெர்க் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட போது, ரஷ்யா குறித்து ரகசிய தகவல்களை பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, உளவு பார்த்த குற்றத்துக்காக, கெர்ஷ்கோவிச்சை ரஷ்ய உளவுத் துறை அமைப்பான பெடரல் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இது குறித்து பெடரல் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘ரஷ்ய ராணுவ தொழில்துறை வளாகத்தில், ரகசியமாக செயல்படும் நிறுவனத்தை குறித்து கெர்ஷ்கோவிச் தகவல் சேகரித்து உள்ளார்.
‘இதன் வாயிலாக, இவர் அமெரிக்காவின் உத்தரவுகளை கேட்டு செயல்படுவது உறுதியாகியுள்ளது’ என தெரிவித்தனர்.
உளவு பார்த்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், கெர்ஷ்கோவிச்சுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிச்சயம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் போரால் ரஷ்யா — அமெரிக்கா இடையே பனிப்போர் நிலவும் சூழலில், நிருபரின் கைது இரு நாட்டு அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
36 ஆண்டுகளுக்குப் பின் உளவு பார்த்த குற்றத்துக்காக அமெரிக்க நிருபர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.