ஹோஷியார்புர், பஞ்சாபின், ஹோஷியார்புர் மாவட்டத்தில், காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை பிடிக்கும் பணியில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை போலீசார் பயன்படுத்தி உள்ளனர்.
பஞ்சாபில், ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் வாயிலாக, மத தீவிரவாத பிரசாரத்தில் அம்ரித்பால் சிங் ஈடுபட்டு வந்தார்.
மேலும் இவர், பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கும் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார். சமீபத்தில் கைது செய்யப்பட்ட தன் ஆதரவாளரை மீட்க, காவல் நிலையத்துக்குள் நுழைந்து, அம்ரித்பால் சிங் வன்முறையில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக அவருடன் தொடர்புடைய, ௧௦௦க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் நோட்டமிட்டதை அறிந்த அம்ரித்பால் சிங், கடந்த 18ல் தப்பி ஓடினார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இதற்கிடையே, பஞ்சாபின், ஹோஷியார்புர் மாவட்டத்தில், அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதன்படி, அம்மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் அவர்களை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று, ஹோஷியார்புர் மாவட்டத்தில் பதுங்கி உள்ள அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்கும் பணியில், ட்ரோன் விமானங்களை, போலீசார் பயன்படுத்தி உள்ளனர்.
மார்னையன் கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகிக்கப்படும் இடங்களில் ட்ரோன் விமானங்கள் வாயிலாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, அம்ரித்பால் நேற்றும் வெளியிட்ட ‘வீடியோ’ வில், ‘நான் சரணடைய போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.