நாடு முழுவதும் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. அதன் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது.
அந்த வகையில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோன பாதிப்பு கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
இதனிடையே சமீபத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி மத்திய அரசு அவசர கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது, மருத்துவமனைக்கு வருபவர்களும், மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ கட்டமைப்புகளுக்கு முகக்கவசம் அணிவது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.