வாஷிங்டன், ‘அமெரிக்காவில் வேலை பார்க்க ‘எச்௧பி’ விசா வைத்துள்ளோரின் கணவன் அல்லது மனைவி வேலை பார்ப்பதற்கு அனுமதி அளித்தது செல்லும்’ என, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, எச்௧பி விசா வழங்கப்படுகிறது. இதை, அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது, எச்௧பி விசா வைத்துள்ளோரின் கணவர் அல்லது மனைவியும், அமெரிக்காவில் பணிபுரிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, ‘சேவ் ஜாப்ஸ் யு.எஸ்.ஏ.,’ என்ற அரசு சாரா அமைப்பு சார்பில், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எச்௧பி விசா வைத்துள்ளோரின் கணவர் அல்லது மனைவி என, ஒரு லட்சம் பேருக்கு இதுவரை வேலை பார்க்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளதாக அந்த அமைப்பு சார்பில் வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், ‘எச்௧பி விசா வைத்துள்ளோரின் கணவர் அல்லது மனைவி வேலை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது செல்லும்’ என, உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை, அமெரிக்க வாழ் இந்தியர் அமைப்புகள் வரவேற்றுள்ளன.