செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதல் வரதட்சனை கேட்டு, இளம்பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அமரம்பேடு பகுதியை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (32). இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லோகபிரியா(26) என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. இதையடுத்து லோகபிரியாவிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கோகுல கண்ணன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் லோகபிரியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோகுல கண்ணன் மற்றும் அவரது தாயும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் லோக பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் லோகபிரியாவின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கோகுல கண்ணன் மற்றும் அவரது தாயிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், வரதட்சணை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் லோகபிரியாவை, கோகுலகண்ணன் அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியதும், இதற்கு கோகுல கண்ணனின் தாய் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்பு இவர்கள் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.