புதுடெல்லி: அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர் ராஜினாமா செய்வாரா அல்லது மேலிட உத்தரவுக்கு பயந்து, எடப்பாடி பழனிசாமியின் சொல்படி நடப்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடமும், இரு கட்சிகளின் தொண்டர்களிடமும் எழுந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பல்வேறு தலைப்புகளில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் விடையளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடு முழுவதும் பா.ஜ. பல கட்சிகளுடன் தோழமையுடன் உள்ளது. 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அந்த தோழமை தொடரும் தமிழ்நாட்டில் பா.ஜ-அ.தி.மு.க. கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ கொண்டுள்ள கூட்டணியும் தொடர்கிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜ இருக்கிறது.
இவ்வாறு அமித்ஷா பேசினார். அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைத்தால், மாநில தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிவித்திருந்தார். இது குறித்து பேச உடனடியாக டெல்லி சென்று அமித்ஷாவையும் சந்தித்தார். அதன்பின்னர் கூட்டணி குறித்து பேசாமல் அமைதி காத்துவந்தார். இந்தநிலையில் அதிமுக கூட்டணி தொடரும், தமிழகத்தில் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை என்று அமித்ஷா அறிவித்து விட்டார். இதனால் அண்ணாமலை சொன்னபடி ராஜினாமா செய்வாரா? அல்லது கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி நடந்து கொள்வாரா என்ற பரபரப்பு அதிமுக, பாஜக தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.