கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கல்குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவன ஒளிப்பதிவாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், கோவை பத்திரிக்கையாளர் மன்றம், மற்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதற்கிடையே மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
நேற்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் செயல்படும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைகாட்சியின் செய்தியாளர் அருண் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜியும் சென்றுள்ளனர்.
அப்போது, குவாரியின் உரிமையாளர் மற்றும் அவருடைய உதவியாளர்கள் சிலர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து, அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் ஒளிப்பதிவுக் கருவியையும் உடைப்பதற்கு முற்பட்டுள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் ஓடிவந்து செய்தியாளர்களை அவர்களிடம் இருந்து மீட்டு அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
செய்தி திரட்டச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது கல்குவாரியைச் சேர்ந்தவர்கள் நடத்தியுள்ள இந்த தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. அதுமட்டுமல்லாமல், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்க உரிய இழப்பீடு கிடைப்பதற்கு , மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியின் போது பத்திரிகையாளர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருவதால் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்திவரும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்றது தெரிவிக்கபட்டுள்ளது.