புதுடில்லி,”நாட்டில் உள்ள, 1,000 நகரங்களை, ‘துாய்மை உத்சவ் 2023’ திட்டத்தின் வாயிலாக குப்பை அற்ற மூன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற நகரங்களாக 2024 அக்டோபருக்குள் மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்தார்.
புதுடில்லியில் நேற்று நடந்த, ‘சர்வதேச கழிவு நீக்க தினம் 2023’ நிகழ்வில், அமைச்சர் ஹர்தீப் பூரி பேசியதாவது:
நாட்டில் உள்ள குப்பைகள் அற்ற நகரங்களுக்கு அதன் தரத்தின் அடிப்படையில் நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும் நடைமுறை 2018ல் நடைமுறைக்கு வந்தது.
இந்த சான்றிதழ்களை பெற பல்வேறு நகரங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. நாட்டின் நகர்புறங்கள், ஓ.டி.எப்., எனப்படும், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகரங்களாக மாற்றப்பட்டு உள்ளன.
மொத்தம், 4,751 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுதும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவைகளாக மாற்றப்பட்டுள்ளன. 3,547 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொதுக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, ஓ.டி.எப்., பிளஸ் அந்தஸ்தை பெற்றுள்ளன.
மேலும், 1,191 நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகள், மலம், கழிவு மேலாண்மையை முழுமையாக செயல்படுத்தி, ஓ.டி.எப்., அந்தஸ்தில் இரண்டு பிளஸ் பெற்றுள்ளன.
கடந்த 2014ல் 17 சதவீதமாக இருந்த கழிவு பதப்படுத்துதல் தற்போது, 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. 97 சதவீத வார்டுகளில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இடம் பெற்றுள்ள 90 சதவீத வார்டுகளில் வசிக்கும் மக்கள், குப்பைகளை தரம் பிரித்து ஒப்படைப்பதை வழக்கமாக கொண்டுஉள்ளனர்.
நகர்ப்புற துாய்மை இந்தியா 2.0 இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும், ‘துாய்மை உத்சவ்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நான்கு லட்சம் பெண் தொழில் முனைவோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
நாட்டில் உள்ள, 1,000 நகரங்களை, ‘துாய்மை உத்சவ் 2023’ திட்டத்தின் வாயிலாக குப்பைகள் அற்ற மூன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற நகரங்களாக 2024 அக்டோபருக்குள் மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.