நாளை ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த நிதி ஆண்டில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை எரிவாயு சிலிண்டர் விலையில் ஏதேனும் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. வட மாநிலங்களில் தேர்தல் முடிந்த உடன் சிலிண்டர் விலையை உயர்த்தியது மத்திய அரசு.
அந்த விலை உயர்வில் இருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் நாளை மீண்டும் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி விலை உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தங்க நகைகளில் 6 இலக்க எண் கட்டாயம்
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு நகைக்கடைக்கும் 6 இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும்.
ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படும். 2 கிராமிற்கு குறைவான எடை கொண்ட நகைகளுக்கு புதிய விதிமுறைகள் கட்டாயமில்லை.
புதிய விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் ரூ.1 லட்சம் அல்லது நகை விலையில் 5 மடங்கு அபராதம். விதிமீறல் இருந்தால் அபராதம் அல்லது சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நாளை முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பித்துள்ளது.
newstm.in