மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீரசாமி மற்றும் தீபக் அதிகாரி ஆகியோர் மக்களவையில் நாட்டில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் மூத்த குடிமக்கள் பெண்களுக்கு கீழ் பெர்த் கிடைப்பதற்கான வசதிகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டில் 2,687 பயணிகள் ரயில்களில் 2,032 பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 10,378 ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை 20.3.2020 முதல் திரும்ப பெறப்பட்டது.
இதனையடுத்து ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் முன்பதிவின்போது கீழ் பெர்த் தானாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இது தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், மூன்றடுக்கு ஏசி பெட்டியில் 4 முதல் 5 படுக்கை என்ற அளவிலும், இரண்டடுக்கு ஏசி பெட்டியில் 3 முதல் 4 படுக்கை என்ற அளவிலும் ஒதுக்கீடு செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.