சென்னை: இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டிருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதிட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த விஷயங்கள் மட்டும் எப்படி சரியாகும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும் என்று கடந்த வாரம் தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அதிகாரப்பூர்வமான பொதுச்செயலாளராக செயல்பட தொடங்கி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் உடனடியாக அப்பீர் செய்யப்பட்டது. அதேபோல எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிப்பதற்கு முன்பு தன்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு மட்டும் நீதிபதிகள் எம்.மகாதேவன் முகமது ஷபிக் ஆகியோர் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
என்னை கட்சியில் இருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி கூறியுள்ளார் எனவே இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த விஷயங்கள் மட்டும் எப்படி சரியாகும்? என்று ஓபிஎஸ் தரப்பில் கேள்வி எழுப்பியது.

இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இல்லை என்று அதிமுக சார்பில் வாதிடப்பட்டது. எங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது என்று கூறிய ஓபிஎஸ் தரப்பு இடைக்கால நிவாரணம் அளித்திருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும் என்று வாதிடப்பட்டது.
தற்போது ஒருங்கிணைப்பாளர் முறை இல்லை. பொதுச்செயலாளர் மட்டுமே இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேரடியாக இறுதி விசாரணைக்கு தயாரா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அனைத்து தரப்பினரும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நேரடியாக இறுதி விசாரணைக்கு ஒப்புக்கொண்டதை அடுத்து வழக்கானது ஏப்ரல் 3ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.