கும்பகோணம்: தமிழகத்திலுள்ள நரிக்குறவர் மக்கள் மீது தீண்டாமை கொடுமைப்படுத்துபவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் த.சுந்தரராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலுள்ள தனியார் திரையரங்கில், நரிக்குறவர் மக்கள், திரைப்படம் பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்றபோது, அங்குள்ளவர் உள்ளே விட மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நரிகுறவ மக்களை, அனைவரது முன்பும், அவமரியாதையுடன், தீண்டாமை கொடுமை செய்தவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நரிக்குறவர் மக்களை பேருந்து மற்றும் பல்வேறு பொது இடங்களில் அவமானப்படுத்துபவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இது போன்ற சம்பவம் இனி மேல் தொடராமல் இருக்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்து தமிழக முதல்வருக்கும் புகார் அனுப்பப்படும். தமிழகத்தில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்தால், தமிழகம் முழுவதுமுள்ள நரிக்குறவர்களை திரட்டி, அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ‘பத்து தல’ திரைப்படம் நேற்று (மார்ச் 30) தமிழகம் முழுவதும் வெளியானது. படத்தைப் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் இன மக்கள் வந்தனர். அப்போது அவர்கள் கையில் டிக்கெட் வைத்திருந்தும் அவர்கள் உள்ளே செல்ல முதலில் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சியும் வெளியானது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.