கலாஷேத்ரா விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா பவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன்.
இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள்.
இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிருவாகத்தினருடன் பேசினர்.
அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அரசைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
newstm.in