சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதுவரை ஜிவி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ள வெற்றிமாறன் முதன் முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார்.
இதனால் விடுதலை படத்திற்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
விடுதலை முதல் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்துடன் இளையராஜாவின் பின்னணி இசைக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இளையராஜாவின் இசை விடுதலை
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன், மூணார் ரமேஷ், இயக்குநர் தமிழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். முதன்முறையாக வெற்றிமாறன் – இளையராஜா கூட்டணி இணைகிறது என்ற செய்தி வந்த நாள் முதல், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல் இசை மூலம் விடுதலை கொடுத்துள்ளார் இளையராஜா.
பாடல்களில் மனதை மயக்கிய ராஜா
விடுதலை முதல் பாகத்தில் மொத்தம் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், வள்ளலார் புகழ்பாடும் பாடலான ‘அருட்பெருஞ்ஜோதி’ படத்தில் முழுவதும் இடம்பெறவில்லை என்றாலும் மற்ற 2 பாடல்களும் சிலிர்க்க வைத்துள்ளன. முதன்முறையாக இளையராஜா இசையில் தனுஷ் பாடிய ‘ஒன்னோட நடந்தா’ பாடல் விஷுவலாக பார்க்கும் போது மெய்மறக்கச் செய்கிறது. அதேபோல், இளையராஜாவும் அநன்யா பட்டும் பாடிய ‘வழிநெடுக காட்டுமல்லி’ பாடலும், படத்தில் பார்க்க இனிமையாக உள்ளது.
பின்னணி இசையில் மிரட்டல்
பாடல்களை விடவும் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் இளையராஜா. அதனை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிந்தது. முதல் பாதியில் சில காட்சிகளில் பின்னணி இசையே இல்லாமல் மெளன ராகம் இசைத்தது. ஆனால், இரண்டாம் பாதியில் ஒத்தையாக நின்று கெத்து காட்டியுள்ளார் இளையராஜா. எளிய மக்கள் மீது போலீஸாரின் அதிகாரம் அகோரமாக ஆட்டம் போடும் போது, ராஜாவும் தனது ஆர்க்கெஸ்ட்ராவை ஆழிப்பேரலையாய் ஆர்ப்பரிக்கச் செய்துள்ளார். அதேநேரம் கிராம மக்கள் அல்லல் படும் காட்சிகளில் ஒலிக்கும் அந்த மென்சோக இசை கண்ணீர் கசிய வைத்துவிடுகிறது.
க்ளைமேக்ஸ் காட்சியில் ருத்ரதாண்டவம்
தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், விடுதலையில் இளையராஜா கொடுத்திருப்பது வெறும் இசை மட்டும் இல்லை. விடுதலை படத்தின் ஆன்மாவை மொத்தமாக சுமந்து வந்துள்ளது இளையராஜாவின் இசை. அதேபோல் த்ரில்லிங்கான காட்சி ஒன்று, கெளதம் மேனன் அதிரடியாக ஒரு ஆர்டர் போடும் காட்சி, சூரி – பவானி ஸ்ரீ காதல் காட்சி என பல இடங்களில் வெரைட்டியாக பிஜிஎம் போட்டுள்ளார். குறிப்பாக க்ளைமேக்ஸில் சுமார் 15 நிமிடங்கள் இளையராஜாவின் பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது. இப்படி படம் முழுக்க இளையராஜா நிகழ்த்திய இசை மாயாஜாலம் ஒன்றல்ல இரண்டல்ல.