புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் தான், கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் ராஜா என்பவர் சேகருக்கு, அறிமுகமாகியிருக்கிறார்.
“லண்டன், பிரான்ஸ் என்று இளைஞர்கள் பலரையும் வேலைக்கு அனுப்பியிருக்கிறேன். பாஸ்போர்ட் மற்றும் ரூ.15 லட்சம் பணம் கொடுத்தால் போதும், உன்னையும் லண்டன் அல்லது பிரான்ஸிற்கு அனுப்பி வைக்கிறேன்” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி பாஸ்போர்ட் மற்றும் ரூ.15 லட்சம் பணத்தையும் கொடுத்துள்ளார். இதற்கிடையே தான், பணம் கொடுத்தவர்களின் நெருக்கடியால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டன் அழைத்துச் செல்வதாகக் கூறி, கிர்கிஸ்தானில் விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அதன்பின்பு தான், சேகருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுத்துள்ளார். உடனே, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் ராஜாவை கைது செய்து விசாரித்த போது தான், இதேபோல், 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை அவர்கள் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
விசாரணையின் போது, ” இளைஞர்களிடம் இருந்து வாங்கிய பாஸ்போர்ட்களை மதுரை ஏஜெண்ட் ராஜ்கமலிடம் கொடுத்துவிட்டேன். அதில், குறிப்பிட்ட தொகையை கன்னியாகுமரியைச் சேர்ந்த ஏஜெண்ட் அட்லின் வினோ அவரது மனைவி நிவேதாவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, மதுரை சென்ற தனிப்படை போலீஸார், ராஜ்கமலிடம் இருந்த பாஸ்போர்ட்களைக் கைப்பற்றிதுடன், ராஜ்கமல் மற்றும் அட்லின் வினோவின் மனைவி நிவேதா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அட்லின் வினோ, வெளி நாடு தப்பிச் சென்றிருக்கிறார். வெளிநாட்டு இந்திய தூதரகம் மூலம் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக, இளைஞர்களை ஏமாற்றிய சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.