புதுடெல்லி: இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரின் அழைப்பை ஏற்று, இஸ்ரேல் சபாநாயகர் அமீர் ஒஹானா தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது. 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இக்குழுவை, சபாநாயகர் ஓம் பிர்லா டெல்லியில் இன்று வரவேற்றார்.
அப்போது பேசிய ஓம் பிர்லா, ”இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு பாரம்பரியமானது. இரு நாடுகளும் வலுவான ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்டவை. பல்வேறு கலாச்சாரங்களை மதிப்பது, ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றுவது என இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. மாறிவரும் உலக சூழலில் இந்தியா – இஸ்ரேல் உறவு மிகவும் முக்கியமானது.
பயங்கரவாதம் அதிகரித்து வருவது குறித்த கவலை இந்தியா – இஸ்ரேல் இரண்டுக்குமே இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில், இந்தியா, இஸ்ரேல் போன்ற ஜனநாயக நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா மற்றும் இஸ்ரேலின் பொதுவான உத்தி உலகிற்கு புதிய திசையை வழங்கும்.
இந்தியா எப்போதும் யூதர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இந்தியாவில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான சூழலை உறுதி செய்து வருகிறது. இஸ்ரேலிய இளைஞர்கள் இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா மேலும் வலுப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இஸ்ரேலியர்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேலிய சபாநாயகர் அமிர் ஒஹானா, ”இந்தியாவும் இஸ்ரேலும் பழமையான நாகரீகங்கள். இரு நாடுகளுக்கிடையேயான உறவு காலங்காலமாக வலுப்பெற்று வருகிறது. இந்தியா அனைத்து துறைகளிலும் அற்புதமாக முன்னேறி வருகிறது. இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுவடையும் என்றும், உலகளாவிய சவால்களை இரு நாடுகளும் கூட்டாக எதிர்கொள்ளும் என்றும் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.