அகமதாபாத்,
ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, 2008-ல் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வாகை சூடியது.
இந்த நிலையில் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை நீடிக்கும் இந்த கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ‘பி’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். ஒவ்வொரு அணியும் மொத்தம் 1லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக போட்டி பொதுவான இடத்தில் நடந்தது. அதாவது அணிகள் தங்களது உள்ளூர் மைதானங்களில் விளையாட முடியாத நிலைமை இருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து விட்டதால் இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் களம் காண இருப்பது கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Image Courtesy: TWITTER