பெங்களூரு,
கர்நாடகாவில் பசரவாஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, அம்மாநில தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதன்படி கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குகள் எண்ணப்பட்டு, வரும் மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது அவரது காரை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படியே முதல்-மந்திரியின் வாகனத்தைத் தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
கர்நாடக முதல்-மந்திரியின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே தனது அதிகாரப்பூர்வ காரை ஒப்படைத்துவிட்டார். இதனால் பசவராஜ் பொம்மை தனது சொந்த காரில் கட்டி சுப்ரமணிய கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த கார் ஹோசாஹுத்யா செக்போஸ்ட்டில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.
அவரது காரில் ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதன் காரணமாக அதிகாரிகள் வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர், இதையடுத்து அவர் தனது பயணத்தை வழக்கம் போலத் தொடர்ந்தார் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் முதல்-மந்திரியின் வாகனமே திடீரென தேர்தல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.