அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 1 முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.நாட்டின் சில மாநிலங்களில், கொரோனா மீண்டும் அதி விரைவாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறது.
வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் உஷார் நிலையில் உள்ளன. அது கோவிட் கட்டுப்பாடு என்பதற்கான நடவடிக்கைகளாக தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி, அதாவது நாளை முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மாநில சுகாதார அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் மா.சுப்ரமணியன் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டார். சனிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் அனைத்து அரசு சுகாதார நிலையங்களிலும் வெளி நோயாளிகள், அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் கட்டாயமாக முகமூடி அணிய வேண்டும்.
அமைச்சர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர், “நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 11,300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என்று மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100 சதவிதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதனால், யாரும் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு கிடையாது. நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதால் முதலில் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.
சனிக்கிழமை முதல் அனைத்து அரசு சுகாதார நிலையங்களிலும் உள்ள பணியாளர்களும், மக்களும் முகமூடி அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வியாழக்கிழமை புதிதாக 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நோய் மேலும் பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட் பாதிப்பு
இன்று (மார்ச் 31, 2023 வெள்ளிக்கிழமை) நாட்டில் சுமார் 3100 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 3,095 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,15,786 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாட்டில் 15,208 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, தொற்று காரணமாக கோவா மற்றும் குஜராத்தில் தலா ஒரு நோயாளி இறந்துள்ளதை அடுத்து, நாட்டில் இறப்பு எண்ணிக்கை 5,30,867 ஆக அதிகரித்துள்ளது.
தடுப்பூசி இயக்கம்
சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, இந்தியாவில் நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தின் கீழ் இதுவரை 220.65 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 7, 2020 அன்று, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23, 2020 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5, 2020 அன்று 40 லட்சத்தையும் தாண்டியுள்ளது.
மே 4, 2021 அன்று, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியைத் தாண்டியது, ஜூன் 23, 2021 அன்று அது மூன்று கோடியைத் தாண்டியது. கடந்த ஆண்டு, ஜனவரி 25 அன்று, மொத்த தொற்று வழக்குகள் நான்கு கோடியைத் தாண்டியது.