சண்டிகர்: 30 கோடி சொத்து வைத்துள்ள தங்கள் மகன், தங்களுக்கு உணவிடவில்லை என தற்கொலைக் கடிதத்தில் சொல்லி உயிரை மாய்த்துக் கொண்டனர் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த வயதான தம்பதியர். அவர்கள் இருவரும் 70 வயதை கடந்தவர்கள். இருவரும் சுதந்திர இந்தியாவில் தங்கள் வாழ்வின் பெரும்பாலான நாட்கள் வழந்தவர்கள்.
பூச்சிக்களை அழிக்கவல்ல மாத்திரையை உட்கொண்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஜெகதீஷ் சந்திர ஆர்யா (78) மற்றும் பாக்லி தேவி (77) என தம்பதியர் இருவரும் இந்த மாத்திரையை உட்கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ளது: ‘நாங்கள், எங்கள் மகன் மகேந்தர் உடன் வசித்து வந்தோம். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உயிரிழந்துவிட்டார். அதன்பின்னர் எங்கள் மருமகள் நீலம் (மகேந்தரின் மனைவி) உடன் வாழ்ந்து வந்தோம். ஆனால், வீட்டை விட்டு எங்களை அவர் வெளியேற்றினார்.
பின்னர் எங்கள் மற்றொரு மகன் வீரேந்தர் உடன் வாழ்ந்து வந்தோம். (இவருக்குதான் 30 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாக தெரிகிறது). அவர் எங்களுக்கு மிச்சம் இருக்கும் அல்லது பழைய உணவை கொடுத்தார். நாள் ஒன்றுக்கு முறையே இரண்டு வேளை கூட எங்களுக்கு அவர் உணவு கொடுக்கவில்லை. எனது மனைவி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். குடும்பத்தாரின் இந்தக் கொடுமை காரணமாக தற்கொலை முடிவை நாங்கள் எடுக்கிறோம். எங்கள் மரணத்திற்கு எங்கள் மகன் மற்றும் இரண்டு மருமகள்களும் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும். எனது சொத்துகளை ஆர்யா சமாஜ் (சங்கம்) கொடுக்கவும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். மறுபக்கம் உயிரிழந்த தம்பதியரின் மகன் வீரேந்தர், நோய் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |