புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரக்கோரி பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து எம்எல்ஏக்களுக்கும் எழுந்து நின்று கைத்தட்டி முதல்முறையாக வரவேற்றனர். டெல்லி சென்று பிரதமரை சந்தித்து இந்த ஆண்டுக்குள் பெறுவோம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நேரு (சுயேட்சை), அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர். அவை ஒரே மாதிரியாக இருப்பதால் ஒன்றாக இணைத்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா: “36 ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு நிராகரித்தது. மக்களால் தேர்வான அரசு உள்ளது. சமூக ரீதியாக, நிதி ரீதியாக, நிர்வாக ரீதியாக குறைந்து மோசமான நிலை ஏற்பட்டு மாநில அந்தஸ்து குரல் கொடுக்கும் நிலை ஏற்ப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளான முதல்வர், அமைச்சர்கள் முடிவு எடுக்காமல் தலைமைச்செயலர், ஆளுநர் முடிவு எடுக்க வேண்டிய நிலையுள்ளது.
இந்திய அரசின் நிதிதான் புதுச்சேரி நிர்வாகத்தை நடத்துகிறது. பெரும்பாலான கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவதால் அதிகாரம் குறைந்துள்ளது. அரசு தீர்மானமாக கொண்டு வரவேண்டும்” என கூறினார்.
இதையடுத்து தீர்மானம் கொண்டு வந்த எம்எல்ஏக்கள் பேசியதைத் தொடர்ந்து, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் மாநில அந்தஸ்துக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக ஆந்திரம் அருகேயுள்ள ஏனாம் எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக், கேரளம் அருகேயுள்ள மாஹே எம்எல்ஏ ரமேஷ் பரம்பத் ஆகியோர் புதுச்சேரியுடன் தங்கள் பிராந்தியங்களும் இணைந்த மாநில அந்தஸ்து பெற ஆதரவு தருவதாக குறிப்பிட்டனர்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்: “இது சிறப்பான தருணம். பாஜக எம்எல்ஏ சட்டப்பேரவை தலைவர் நான். எனது ஒப்புதல் இல்லாமல் பேசமாட்டார்கள். பேரவைக்கு முன்பு நடந்த கூட்டத்தில் மாறுபட்ட கருத்து கொண்ட இருவர் கூட மாறி தனது ஆதரவை தெரிவித்தனர். முன்பு கூட்டணியில் செய்யத் தவறியதை சுட்டிக்காட்டினோம் அதில் எதிர்க்கட்சித் தலைவரும் நானும் இருந்ததால் சொல்கிறோம்.” என அமைச்சர் கூறினார்.
இச்சூழலில் சுயேட்சை எம்எல்ஏ நேரு மாநில அந்தஸ்து தீர்மானம் வருவதற்கான காரணம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம், பாஜக எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவைக்குறிப்பில் இருந்து அவை நீக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேரு எம்எல்ஏ வெளிநடப்பு செய்து சிறிது நேரத்தில் பேரவைக்குள் வந்தார்.
பேரவைத் தலைவர்: “அனைத்து எம்எல்ஏக்களும் வலியுறுத்தி கேட்டுள்ளனர். அமைப்புகள் வெளியே போராடுகிறது. பேரவை சட்டமாக கொண்டு போனால்தான் மாநில அந்தஸ்து கிடைக்கும். வெளியே நடந்தால் இருக்காது. தவறான தகவல் தராதீர். எம்எல்ஏக்கள் மட்டுமே கொண்டு வரமுடியும்” என கூறினார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்: “புதுசேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்பது பாஜக எண்ணம். அத்தனை வகையிலும் ஒத்துழைப்பு தருவோம். தற்போது இந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சட்டப் பேரவையில் போடப்பட்ட தீர்மானங்கள் எத்தனை முறை மத்திய அரசிடம் கொண்டு செல்லப்பட்டன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரம் பறிபோய்விடுமோ என்று நினைத்து எந்த முயற்சியும் அதிகாரிகளும் எடுப்பதில்லை. அத்தனை தீர்மானங்களும் டெல்லி சென்றடைந்ததில்லை.
மாநில மக்கள் உணர்வுகளை டெல்லிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தயாராக இல்லை. அரசு தீர்மானங்கள் தற்போது கொண்டு செல்லும் போது முன் எச்சரிக்கையுடன் மத்திய அரசிடம் சென்று அடைந்து மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை முயற்சி தொடர்ந்து இருக்க வேண்டும்.
அந்தந்த மொழி பேசும் மாநிலத்தோடு சேர்த்து விடுவார்களோ என்ற இதர பிராந்திய எம்எல்ஏக்கள் அச்சத்தில் இருந்தனர்.
ஒரே மாநிலமாக இருக்க வலியுறுத்தப்படும். கடன் ரூ. 10 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. தள்ளுபடி செய்து தரக்கூடிய மாநில அந்தஸ்தாக இருக்க வேண்டும். அதை உருவாக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றி தர மத்திய அரசு தயாராக இருக்கிறது. உகந்த சூழல் தற்போது சரியான நேரம், தருணம் இருக்கிறது.முழு ஆதரவை பாஜக தரும்.” என அமைச்சர் கூறினார்.
அதையடுத்து முதல்வர் ரங்கசாமி: “நிர்வாக சிரமம் இங்கிருந்தால் தெரியும். ஆளும் போதுதான் தெரியும். நம் உரிமையும் நிலை பெற வேண்டும். அதற்கு மாநில அந்தஸ்து மட்டுமே ஒரே வழி. பலமுறை சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளோம். வலியுறுத்தி செல்லும் போது மத்திய அரசானது பார்ப்போம் என்றனர்.
இந்த சட்டப்பேரவையில் ஒரு மனதாக இவ்வளவு தெளிவாக அனைத்து எம்எல்ஏ-க்களும் பேசி பார்த்ததில்லை. அனைத்து கட்சி எம்எல்ஏக்கள்ம் பேசினர். அவ்வளவு வலி. அரசு தீர்மானமாக மத்திய அரசுக்கு கொண்டு சென்று மாநில அந்தஸ்து பெறுவோம். நல்ல நேரம் கூடி வந்துள்ளது. நல்லது நடக்கும். மாநில அந்தஸ்து கிடைக்கும். அந்த நேரம் வந்துள்ளது.
மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. கோரிக்கையை கொடுக்கும் நிலையிலும் இருக்கிறது. அதனால் சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை அரசு தீர்மானமாக கொண்டு சென்று வலியுறுத்தி பெறுவோம். வெற்றியை பெறுவோம். எம்எல்ஏக்கள் அனைவரையும் அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்ர் அமைச்சர்களை சந்தித்து பேசி இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்தை பெறுவோம்” என முதல்வர் நம்பிக்கை கூறினார்.
அதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். அதையடுத்து எதிர்க்கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை திரும்ப பெற்றவுடன், அத்தீர்மானம் அரசு தீர்மானமாக நிறைவேறுவதாக பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்தார்.