திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 67 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் இந்த பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞான சௌந்தரி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்க்கத்துல்லாகானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து பர்க்கத்துல்லாகான் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், கோணி ஓட்டம், லெமன் அன்ட் ஸ்பூன் ஓட்டம், ஈட்டி எரிதல், குண்டு எரிதல், உருளைக்கிழங்கு சேகரித்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகளை நடத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசௌந்தரி தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் பொன்மணி ஆனந்தன், துணைத் தலைவர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் அஜிதாரெஜி, எஸ்தர் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பர்கத்துல்லாகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.